உடைந்த மணல்வீடு நினைவுபடுத்தும் நம் காதல்




(1)
நீ வருவதாய்ச்சொன்ன இந்த
அந்திமாலை எனக்கு ஒரு
அடை மழையை பரிசளித்துக்கொண்டிருக்கிறது..
எல்லாத்திசைகளிலும் உனக்கான காத்திருப்பை

விதைத்தபடி பரிதவிக்கிறது என்னிதயம்

ஒரு இலை விழுவதைப்போன்ற மென்மையான காட்சியிலிருந்து
ஒரு தவம் கலைவது போன்ற கடினமான காட்சிக்குள்
மெல்ல மெல்ல நுழைகிறேன் நான்..

(2)

எதிர்த்திசையில் தனது மணல்வீட்டை
பத்திரப்படுத்த தவிதவிக்கும் ஒரு
பாவாடைச் சிறுமியின் கருணை கூட
உனக்கில்லாதது ஆச்சர்யமளிக்கிறது..

(3)
நேற்றும் நீ வரவில்லை
இன்றும் நீ வருவதாயில்லை
நாளையும் வரப்போவதில்லை

(4)
வீட்டில் வேலை என்றொரு காரணம் நீ சொல்லக்கூடும்
வலுத்துப்பெய்யும் மழை கூட ஒரு காரணமாயிருக்கலாம்
தனியே வரத்தயங்கும் உன் சுபாவமும் ஒரு காரணமோ?
தன்னிலை மறந்த தூக்கமும் உன் வரவைத் தடுத்திருக்கலாம்
நான் வராமல் விட்டிருப்பேன் என்ற வரட்டு நம்பிக்கையும் உனக்கிருக்கலாம்
மறந்துவிட்டது என்ற பொதுத்தன்மையும் உனக்கிருக்கலாம்...

(5)
எனதன்பை நீ நிராகரித்ததனால்தான்
நீ வரவில்லை என்ற காரணத்தை
என் உள் மனம் ஏற்பதாயில்லை..
அதுதான் உண்மை என்றானபோதும்..

(6)
கொஞ்ச நேர நிமிட நகர்வில்
மழை நின்றுவிட்டது..
அந்தோ சிறுமியின் மணல் வீடும்
உடைந்துபோயிற்று..

            நிந்தவூர் ஷிப்லி

Post a Comment

0 Comments