தீவிரவாதிகள் கடத்த முயன்றால் அவர்களிடமிருந்து தப்பிப்பது எப்படி என்பது குறித்து இளவரசர் ஹாரிக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பிரிட்டன் இளவரசரான ஹாரி, அந்நாட்டு இராணுவத்தின் ஹெலிகொப்டர் பிரிவில் பயிற்சி பெற்று, தற்போது ஆப்கானிஸ்தான் சென்றுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் நேட்டோ நாடுகளின் படையில் உள்ள இங்கிலாந்து இராணுவம் தங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதால், இளவரசர் ஹாரியை உயிருடனோ அல்லது கொலை செய்தோ பிடிப்போம் என்று தலிபான் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனால் ஹாரிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பில்லாமல் வெளியே செல்லவும் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தீவிரவாதிகள் கடத்த முயன்றால் அவர்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி, ஒருவேளை தீவிரவாதிகளிடம் அகப்பட்டு விட்டால் அவர்களின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருப்பது தொடர்பான பயிற்சிகள் ஹாரிக்கு வழங்கப்பட்டு வருகிறது என்று இங்கிலாந்தின் டெய்லி ஸ்டார் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தீவிரவாதிகளிடம் ஹாரி அகப்பட்டாலும் அவரால் தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று இராணுவ வீரர் ஒருவர் தெரிவித்ததாகவும் அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.