ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் பங்களாதேஷ் அணியை துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 259 ஓட்டங்களைப் பெற்றது. முதலாவது விக்கெட்டுக்காக 44 ஓட்டங்களைப் பகிர்ந்த அவ்வணி, ஒரு கட்டத்தில் 4 விக்கெட்டுக்களை இழந்து 129 ஓட்டங்களைப் பெற்றுத் தடுமாறிய போதிலும், 5ஆவது விக்கெட்டுக்காக தமிம் இக்பாலும், நசீர் ஹொசைனும் 75 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தனர்.
துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்பாக தமிம் இக்பால் 136 பந்துகளில் 112 ஓட்டங்களையும், நசீர் ஹொசைன் 59 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 73 ஓட்டங்களையும், மகமதுல்லா 51 பந்துகளில் 29 ஓட்டங்களையும் பெற்றனர். வேறு எந்த வீரரும் 20 ஓட்டங்களுக்கு அதிகமாகப் பெற்றுக் கொள்ளவில்லை.
பந்துவீச்சில் இலங்கை சார்பாக லசித் மலிங்க, அஞ்சலோ மத்தியூஸ் இருவரும் தலா 2 விக்கெட்டுக்களையும், நுவான் குலசேகர, திஸர பெரேரா, சச்சித்திர சேனநாயக்க மூவரும் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் மின் விளக்குகள் செயலிழந்ததன் காரணமாகப் போட்டி தடைப்பட்டதுடன், இலங்கை அணி 41 ஓவர்களில் 238 ஓட்டங்கள் வெற்றி இலக்காக வழங்கப்பட்டது.
இதன்படி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 35.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. முதலாவது விக்கெட்டுக்காகக் குஷால் ஜனித் பெரேராவும், திலகரட்ண டில்ஷானும் 12.1 ஓவர்களில் 106 ஓட்டங்களைப் பகிர இலங்கை அணியின் வெற்றி இலகுவானது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக திலகரட்ண டில்ஷான் 108 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 113 ஓட்டங்களையும், குமார் சங்கக்கார 68 பந்துகளில் 63 ஓட்டங்களையும், குஷால் ஜனித் பெரேரா 35 பந்துகளில் 42 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாக வீழ்த்தப்பட்ட விக்கெட்டுக்களை றூபெல் ஹொசைன், சொஹக் கஷி இருவரும் கைப்பற்றியிருந்தனர்.
இப்போட்டியின் நாயகனாக இலங்கை அணியின் திலகரட்ண டில்ஷான் தெரிவானார்
0 Comments