மத்தல மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலைய திறப்பு விழாவன்று மைக்ரோசொப்ட் ஸ்ரீலங்கா மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றின் கூட்டிணைவுடன் ஹம்பாந்தோட்டை சிட்டி அப் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விமான நிலைய வளாகத்தில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இவ்வைபவத்தில் வெளிநாட்டு, உள்நாட்டு பிரமுகர்கள், அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்கள், உள்ளூர் வர்த்தக தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
விண்டோஸ் 8 ஐ மையமாக கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ள ஹம்பாந்தோட்டை சிட்டி அப் 'விண்டோ டு ஸ்ரீலங்கா' என்ற எண்ணக்கருவில் வின்டோஸ் 8 ஒப்பரேட்டிங் சிஸ்டத்தில் இணைந்துள்ள 60 மில்லியன் பாவனையாளர்களுக்கு தகவல்களை வழங்கும் ஆற்றலையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
மைக்ரோசொப்ட் ஸ்ரீலங்கா நிறுவனம் நிர்மாணித்துள்ள ஹம்பாந்தோட்டை சிட்டி அப்பை பயன்படுத்துவதன்மூலம் ஹம்பாந்தோட்டை தொடர்பாக தகவல்கள் அனைத்தையும் பயணிகள் மற்றும் முதலீட்டாளர்கள் அறிந்துகொள்ள முடியும். அத்துடன் விமான சேவை அட்டவணை, தங்குமிடம், முக்கிய சுற்றுலா இடங்கள், வர்த்தக தகவல்கள் போன்றவற்றையும் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பும் உள்ளது.
அதியுயர்ரக புகைப்படங்கள், முக்கிய தகவல்கள், நகரம் தொடர்பான வரைபட வழிகாட்டல்கள் ஆகியன இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் இணையத்தள வசதியில்லாதபோதிலும் இச்சேவைகளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு பயணிகளுக்கு கிடைக்கின்றமை விசேட அம்சமாகும்.
இலங்கை தமது அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கு உலகின் முன்னிலை மென்பொருள் நிறுவனமான மைக்ரோசொப்ட் உதவி செய்ய தயாராக இருப்பதாகவும், இந்த அப் மூலம் உலகில் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்கள் ஹம்பாந்தோட்டை தொடர்பாக தரவுகளை தமது விரல்நுணியில் வைத்திருக்க சந்தர்ப்பம் கிடைப்பதாகவும் அங்;குரார்ப்பண வைபவத்தில் குறிப்பிட்ட மைக்ரோசொப்ட் ஸ்ரீலங்காவின் வதிவிட முகாமையாளர் சிறியான் டி சில்வா விஜேரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வழங்கிய ஒத்துழைப்புகளுக்கு தமது நன்றிகளையும் தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டையை தொடர்ந்து எதிர்காலத்தில் கொழும்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, அநுராதபுரம், கண்டி, காலி, நீர்கொழும்பு, பொலன்னறுவை, குருநாகல், யாப்பகூவ, சீகிரியா, தம்புள்ளை ஆகிய பகுதிகளுக்கும் விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன் விண்டோஸ்8 கையடக்க சாதனங்களிலும் இச்சேவைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் அமைகின்றமையும் குறிப்பிடத்தக்கது
0 Comments