(அஸ்லம் மௌலான)
சாய்ந்தமருது பிரதேசத்திற்கான தனியான உள்ளூராட்சி மன்றத்தை மேலும் இழுத்தடிக்காமல் உடனடியாக வர்த்தமானியில் பிரகடனப்படுத்துமாறு வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசங்களில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதுடன் வீதி மறியல் போராட்டமும் இடம்பெற்று வருகின்றது.
கல்முனை- அக்கரைப்பற்று நெடுஞ்சாலையில் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக பெரும் திரளான பொது மக்கள் வீதியில் அமர்ந்து சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் சாய்ந்தமருது நெடுசாலை ஊடான கல்முனை- அம்பாறை, கல்முனை- அக்கரைப்பற்று பொதுப் போக்குவரத்து சேவைகள் முற்றாக ஸ்தம்பித்திருந்தன. அங்கு பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்ததை அவதானிக்க முடிகிறது.
இதன் காரணமாக இப்பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள், கடைகள் மற்றும் பொதுச் சந்தைகள் எவையும் திறக்கப்படவில்லை. சாய்ந்தமருது பிரதேச செயலகம் உள்ளிட்ட அரச நிறுவனங்கள், பாடசாலைகள், அரச, தனியார் வங்கிகள் எவையும் இயங்கவில்லை.
இந்த ஹர்த்தாலை முன்னிட்டு சாய்ந்தமருது நகரம் எங்கும் கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டுள்ளதுடன், பல்வேறு கோஷங்கள் அடங்கிய பதாதைகளும் தொங்கவிடப்பட்டுள்ளதுடன் போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருக்கின்றன.
சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல், ஜம்மியத்துல் உலமா சபை, வர்த்தக சங்கம் மற்றும் பொது அமைப்புகள் ஒன்றிணைந்த செயலணியின் அழைப்பின் பேரில் இந்த போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.





0 Comments