நாவிதன்வெளியில் தனியார் கடைகளில் யூரியா உள்ளிட்ட உர வகைகள் கூடுதல் விலைக்கு விற்பனை விவசாயிகள் கவலை

(எம்.எஸ்.எம்.சிஹாப்)
நாவிதன்வெளிபிரதேசத்தில் சவளக்கடை மற்றும் மத்தியமுகாம் பிரதேசத்திலுள்ள தனியார் கடைகளில் யூரியா உள்ளிட்ட  உர வகைகள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக சவளக்கடை விவசாய கேந்திரநிலையத்தின் கீழ் வேளாண்மைச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
அரசாங்கத்தினால் யூரியா உரம் 2500 ரூபா நிர்ணய விலையில்  விற்பனை செய்யப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் தனியார் கடை உரிமையாளர்கள் உரத்திற்கு செயற்கைத்தட்டுப்பாட்டை ஏற்படுத்தி 2700 தொடக்கம் 2850 வரையான கூடுதல் விலைகளில் விற்பனை செய்வதாகவும் இவ்வாறு பெறப்படும் கூடுதல் பணத்திற்கு பற்றுச் சீட்டு வழங்கப்படுவதில்லை எனவும்விசனம் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை சவளக்கடை விவசாய கேந்திர நிலையத்தின் கீழ் வேளாண்மைச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு உரமானியத்திற்காக வழங்கப்படும் பணத்தொகைகள் இதுவரை வங்கிக்கணக்குகளில் வைப்புச் செய்யப்படவில்லை எனவும் இதனால் உரிய வேளைக்கு வேளாண்மைகளுக்கு உரத்தை இடுவதற்கு திண்டாடி வருவதாகவும் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதுதொடர்பில் அம்பாரை மாவட்ட விலைக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் பிரதேச விவசாய அமைப்புக்கள் துரித நடவடிக்கை மேற்கொண்டு விவசாயிகளுக்கு உதவ முன்வர வேண்டுமெனகோரிக்கையும் விடுக்கின்றனர்.

Post a Comment

0 Comments