(எம்.எஸ்.எம்.சிஹாப்)
நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள முன்பள்ளி பாடசாலைகளிடையே நடாத்தப்பட்ட உற்பத்தித்திறன் போட்டியில் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல முன்பள்ளி பாடசாலைமுதலாம் இடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
நாவிதன்வெளி பிரதேச செயலக திட்டமிடல் பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்போட்டியில் இரண்டாம் இடத்தை சாளம்பைக்கேணி மெகா முன்பள்ளி பாடசாலையும், மூன்றாம் இடத்தைநாவிதன்வெளி பாரதி முன்பள்ளி பாடசாலையும் பெற்றுக் கொண்டன.
மாணவர்களை ஆரம்பத்திலிருந்து வினைத்திறனுடையவர்களாக வளர்த்தெடுத்து எதிர்காலத்தில் சிறந்த தலைவர்களாக மாற்றுவதே இதன் நோக்கமாகும்.
இதனடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கான பரிசில் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலக கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ரி.மோகனகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தெரிவுசெய்யப்பட்ட முன்பள்ளிப் பாடசாலைகளுக்கான பரிசில்களையும், சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள முன்பள்ளிப் பாடசாலைகளின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது முன்பள்ளிப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

0 Comments