இலங்கையில் மோட்டார் வாகனங்கள் மற்றும் பொறியியல் துறையில் முன்னிலை வகித்து வருகின்ற நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழும் Diesel & Motor Engineering PLC (DIMO), மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் எந்திரவியல் பொறியியல் பீடத்தின் மாணவர்களுடன் இணைந்து, உலகில் இடம்பெறுகின்ற மிகப் பாரிய மாணவர்களுக்கான மோட்டார் வாகன விளையாட்டுப் போட்டியான Formula Student 2018 இல் பங்குபற்றுவதற்காக பல்கலைக்கழக மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட DI-MORA P2 என்ற பந்தய மோட்டார் காரை அறிமுகப்படுத்தி வைத்துள்ளது.
ஐக்கிய இராச்சியத்தில் 2018 ஜுலை 11 முதல் 15 ஆம் திகதி வரை Formula Student 2018 போட்டி இடம்பெறவுள்ளதுடன், 26 நாடுகளிலுள்ள 90 இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களிலிருந்து 3,000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள், 5,000 வரையான பங்குபற்றுனர்கள், 250 தொழிற்துறை சார்ந்தவர்கள் இதில் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது. எந்திரவியல் பொறியியலாளர்கள் சங்கத்தால் (Institution of Mechanical Engineers) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்போட்டியானது ஐரோப்பாவிலேயே மிகவும் உச்சமான கல்வியல் சார்ந்த மோட்டார் விளையாட்டுப் போட்டியாக விளங்குவதுடன், தொழிற்துறை மற்றும் பிரபல பொறியியலாளர்களின் பக்கபலமும் இதற்கு உண்டு. பந்தயக் கார் தொடர்பான தமது புரிந்துணர்வை வெளிப்படுத்தி, அதன் செயற்திறனை பரீட்சார்த்தம் செய்யும் வகையில் நிலையான மற்றும் வலுவான போட்டிகளில் கலந்துகொண்டு போட்டியிடுவதற்காக ஒரு வருட காலத்தில் ஒற்றை ஆசனத்தைக் கொண்ட பந்தயக் காரொன்றை வடிவமைத்து, கட்டமைப்புச் செய்யுமாறு உலகெங்கிலுமுள்ள பல்கலைக்கழகங்களில் பொறியியல் மாணவர்களுக்கு சவால் விடும் வகையில் இப்போட்டி அமைந்துள்ளது. Formula Student போட்டிகளில் பங்குபற்றியுள்ள டசின் கணக்கான போட்டியாளர்கள் Formula 1 போட்டியில் கலந்துகொள்ளும் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளதுடன், மேலும் பல நூற்றுக்கணக்கானவர்கள் எதிர்கால கார்களை பொறியமைத்து, வடிவமைப்புச் செய்யும் பொறியியலாளர்களாக உலகிலுள்ள மாபெரும் மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களில் தற்போது பணியாற்றி வருகின்றனர். உலகெங்கிலுமுள்ள பல்கலைக்கழகங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களிலிருந்து பிரித்தானிய மோட்டார் விளையாட்டின் தாயகமான, புகழ்பூத்த Silverstone Circuit பந்தயத் திடலில் போட்டியிடுவதற்காக 92 அணிகள் தமது ஸ்தானத்தை வெற்றிகரமாக உறுதிப்படுத்தியுள்ளன. மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் TeamSHARK அணியும் அந்த 92 அணிகளுள் ஒன்றாக இடம்பிடித்து பெருமை சேர்ப்பித்துள்ளது.
TeamSHARK அணிக்கான முழுமையான அனுசரணையை DIMO நிறுவனம் வழங்குவதுடன், காரை வடிவமைத்து, பரீட்சார்த்தம் செய்தல், அணி ஐக்கிய இராச்சியத்திற்கு பயணிக்கும் செலவுகள் மற்றும் போட்டிக்காக பந்தயக் காரை விமானம் மூலமாக ஐக்கிய இராச்சியத்திற்குக் கொண்டு செல்வது உட்பட ஒட்டுமொத்த இடப்பெயர்வு செலவுகளையும் உள்ளடக்கும் வகையில் அதன் அணுசரனை அமைந்துள்ளது. TeamSHARK அணி பந்தயக் காரை வடிவமைத்து தயாரிக்கும் ஒவ்வொரு படிமுறையிலும் DIMO நிறுவனம் தனது நிபுணத்துவ ஆலோசனை மற்றும் வழிகாட்டலை வழங்கியுள்ளதுடன், காரை வடிவமைப்பதற்காக DIMO நிறுவனத்தின் தொழிற்சாலையை முழுமையாக உபயோகிப்பதற்கும் இடமளித்திருந்தது. புத்தாக்கமான சிந்தனையினூடாக, சிக்கலான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் ஆற்றலுடன், திறன்மிக்க பட்டதாரிகளை தோற்றுவிக்கும் ஒரு முதலீடாகவே DIMO இம்முயற்சியில் கால்பதித்துள்ளது. இச்செயற்திட்டமானது தொழில்நுட்ப அம்சங்கள் மீது மட்டும் கவனம் செலுத்தவில்லை, மாறாக, செயற்திட்ட முகாமைத்துவம், நிதிசார் திட்டமிடல் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றின் மீதும் கவனம் செலுத்தியுள்ளது. சர்வதேச மேடையில் தமது திறன் மற்றும் தீவிர உணர்வை காண்பிப்பதற்கு வாய்ப்பளித்து, இலங்கையில் எதிர்கால திறமைசாலிகளை உந்துவிப்பதே DIMO இலக்காகும். Formula Student போட்டியில் கலந்துகொள்ள பல முன்னாள் மாணவர்கள் டீசலில் இயங்கும் சஃபாரி வண்டியை (safari cab) முழுமையான மின்சாரத்தில் இயங்கும் சஃபாரி வண்டியாக மாற்றியமைத்தல் அடங்கலாக பல்வேறுபட்ட மோட்டார் வாகன மற்றும் இயக்கவியல் செயற்திட்டங்களில் பணியாற்றுவதற்காக DIMO நிறுவனத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
Formula Student போட்டியில் இலங்கை பிரதிநிதித்துவம் செய்வது இது முதற்தடவையல்ல. DIMO மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழகம் ஆகியன ஒன்றிணைந்து, 2016 ஆம் ஆண்டில் ஒரு அணியை அனுப்பி வைத்ததுடன், இத்தகைய போட்டியில் இலங்கை அணி ஒன்று பங்குபற்றுவது அதுவே முதற்தடவையாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது. அணியும், அவர்களுடைய பந்தயக் DIMORA P1 ஆனது “Best Newcomer in Class 1”, “Best Individual Driver” மற்றும் Dedication to Formula Student ஆகிய மூன்று விருதுகளை வெற்றிகரமாக தனதாக்கியிருந்தது.
DIMO நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே குறிப்பிடுகையில், 'புத்தாக்கமானது எந்தவொரு முயற்சியிலும் முக்கிய பாத்திரம் வகிப்பதுடன், நாட்டில் வர்த்தகத்துறையினர் புத்தாக்கத்தை ஊக்குவிப்பது மிகவும் முக்கியமாகும். மிகவும் ஆர்வமூட்டும் இச்செயற்திட்டத்திற்கு அணுசரனையளிப்பதற்காக மொரட்டுவை பல்கலைக்கழகத்துடன் DIMO ஒத்துழைத்து செயற்பட முன்வந்தமைக்கு அதுவும் ஒரு காரணம். எமது மோட்டார் வாகன வர்த்தகத்துடன் நேரடியான தொடர்பினைக் கொண்டுள்ள இத்தகைய ஒரு முன்னெடுப்பில் அங்கம் வகிப்பது உண்மையில் எமக்கு பெருமையளிக்கின்றது,' என்று குறிப்பிட்டார். அணிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான பேராசிரியர் கபில பெரேரா அவர்கள் கூறுகையில், 'தொழிற்துறையின் உண்மையான ஆதரவு மற்றும் மாணவர்களின் முன்னெடுப்புக்களின் கூட்டுக்கு மொரட்டுவை பல்கலைக்கழகம் எப்போதும் ஆதரவளித்து வந்துள்ளது. 2016 ஆம் ஆண்டில் படைத்த மகத்தான சாதனையைத் தொடர்ந்து Formula Student 2018 போட்டியில் பங்குபற்றவுள்ள TeamSHARK அத்தகைய கூட்டு முயற்சிகளுக்கு மிகச் சிறந்த ஒரு உதாரணமாகும். TeamSHARK அணிக்குப் பாராட்டுக்கள்,' என்று குறிப்பிட்டார்.
DIMO நிறுவனத்தின் பணிப்பாளரான விஜித பண்டார கூறுகையில், 'மொரட்டுவை பல்கலைக்கழகத்துடன் எமது அறிவையும், நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொள்வதில் நாம் மிக்க ஆர்வத்துடன் உள்ளதுடன், இன்று இச்சாதனையை நேரடியாக காண்பதையிட்டு நாம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளோம். நாட்டில் புத்தாக்கம், திறன்கள் மற்றும் தகைமை மட்டங்களை மேம்படுத்தல் ஆகியவற்றின் மீது நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்புடனான ஈடுபாட்டினையும் இச்செயற்திட்டம் பிரதிபலிக்கின்றது,' என்று குறிப்பிட்டார்.
DI-MORA P2 ஆனது அதிநவீன வடிவமைப்பு மற்றும் உற்பத்தி வழிமுறைகளை உபயோகித்து முற்றாக மாணவர்களால் தயாரிக்கப்பட்ட ஒரு முற்றிலும் புதிய வாகனமாகும். அதியுயர் திறன் கொண்ட ஆகாய விமான தரத்திலான மூலப்பொருட்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளதுடன், 2016 ஆம் ஆண்டில் 300 கிலோ எடையுடன் தயாரிக்கப்பட்ட DIMORA P1 உடன் ஒப்பிடுகையில், 195 கிலோ எடை கொண்ட காரை தற்போது அணி தயாரித்துள்ளது. 3-cylinder 650cc Yamaha இயந்திரத்துடன், paddle-shift transmission செலுத்தல் முறைமை பொறியமைப்பானது 3.5 செக்கன்களுக்குள் கார் மணித்தியாலம் ஒன்றுக்கு 100 மைல் வேகத்தை எட்டுவதற்கு வழிகோலுகின்றது. 3D-printing போன்ற புதுமையான உற்பத்தி தொழில்நுட்பங்களை உபயோகித்துள்ள DI-MORA P2 வழமையான பாகங்களை விடவும் உயர் திறன்கொண்ட பாகங்களை உபயோகித்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மெல்லிய காபன் நார் மேற்பாகமாக வெளிவந்துள்ளதுடன், மாணவர்களால் வடிவமைக்கப்பட்டு, Southern Spars (Pvt) Ltd நிறுவனத்தில் கட்டமைப்புச் செய்யப்பட்டுள்ளது.
0 Comments