3 ஆவது முறையாக இடம்பெறவுள்ள Commando Challenge Supercross 2018 மோட்டார் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தய நிகழ்வை இலங்கை பந்தய மோட்டார் கார் ஓட்டுனர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் சங்கம் மற்றும் CEAT Sri Lanka ஆகிய ஸ்தாபனங்களுடன் இணைந்து இலங்கை இராணுவத்தின் கொமாண்டோ படைப் பிரிவு ஏற்பாடு செய்துள்ளது. இப்பந்தய நிகழ்வானது ஆகஸ்ட் 5 ஆம் திகதி ஊவா குடா ஓய கொமாண்டோ படைப்பிரிவு பயிற்சிப் பாசறையில் இடம்பெறவுள்ளது.
உள்நாட்டு பந்தய அரங்கில் மிகவும் நீளமான, விசாலமான மற்றும் வேகமான ஒரு பந்தயத் திடலாகவும், சர்வதேச தரத்திற்கு ஈடான ஒரு பந்தயத்திடலாகவும் supercross ஆனது பலத்த எதிர்பார்ப்பைத் தோற்றுவித்துள்ளது. துட்டகெமுனு மன்னனும் அவனது வீரர்களும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பிரதான பயிற்சித் தளமாக உபயோகித்தனர் என நம்பப்படுகின்ற பலக்காருவ என்று அழைக்கப்படும் பிரதேசத்தை பின்னணியாகக் கொண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசத்தில் இத்திடல் அமைந்துள்ளது. கார் பந்தயத்திடல் 1.7 கிமீ நீளத்தையும், மோட்டார் சைக்கிள் பந்தயத்திடல் 1.4 கிமீ நீளத்தையும் கொண்டுள்ளதுடன், இலங்கை பந்தய கார் ஒட்டுனர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் சங்கத்தின் தொழில்சார் வல்லுனர்களின் மேற்பார்வையின் கீழ் தொழில்நுட்ப வழிகாட்டலுடன் அமைக்கப்பட்டுள்ளது. இப்பந்தய நிகழ்வில் 12 வகையான மோட்டார் கார் பந்தயங்களும், 10 வகையான மோட்டார் சைக்கிள் பந்தயங்களும், அடங்கியுள்ளதுடன், நாட்டிலுள்ள மிகவும் திறமையான ஓட்டுனர்கள் மற்றும் ஓட்டிகள் பலரும் இதில் பங்குபற்றி தமது திறமைகளை பரிசோதிக்கவுள்ளனர். இந்நிகழ்வில் பெரும் எண்ணிக்கையான பார்வையாளர்கள் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுவதுடன், நாட்டில் இடம்பெறவுள்ள மிகவும் மயிர்கூச்செறியும் பந்தயத்தை அவர்கள் மிகவும் அருகிலிருந்தே பார்த்து மகிழும் வாய்ப்புக் கிட்டியுள்ளது.
இப்பந்தயம் தொடர்பாக அறிவிக்கும் ஊடக நிகழ்வில் கொமாண்டோ படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான ஆர். ஏ. நுகேரா உரையாற்றுகையில், 'மூன்றாவது முறையாகவும் இடம்பெறவுள்ள Commando Challenge Supercross பந்தயம் மிகவும் கவர்ச்சியான இந்த பந்தயத்திடலில் கடந்த 2 ஆண்டுகளாக நாம் காணப்பெற்றுள்ள மிகச் சிறந்த மோட்டார் பந்தயத்தின் மிகச் சிறந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்டுள்ளது. துட்டகெமுனு மன்னன் மற்றும் அவனது தீரம்மிக்க படைவீரர்களின் யுகத்தை நமக்கு நினைவூட்டுகின்ற வகையில், நாட்டில் வரலாற்றுச் செழுமை வாய்ந்த இடத்திற்கு நம்மை இட்டுச் செல்கின்ற தனித்துவமான சிறப்பினைக் கொண்ட இப்பந்தயத்திடல், ஓட்டுனர்கள் மற்றும் ஓட்டிகள் மற்றும் நிகழ்வைக் கண்டுகளிக்க வருகை தரவுள்ள பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் என அனைவரின் அனுபவத்தையும் நிச்சயமாக மேம்படுத்தும். இரு பந்தயத்திடல்களும் சர்வதேச தரம் கொண்டவையாக அமைந்துள்ளதுடன், இத்துறையில் அறிவையும், அனுபவத்தையும் கொண்டுள்ள நிபுணர்களின் துணையுடன் வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ளதால், மோட்டார் பந்தய வீரர்களின் திறமை மற்றும் ஆற்றல்களை கடுமையாகச் சோதிப்பதாக அமையும்,' என்று குறிப்பிட்டார்.
இலங்கை பந்தய மோட்டார் கார் ஓட்டுனர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் சங்கத்தின் தலைவரான காமில் ஹுசைன் உரையாற்றுகையில், 'இலங்கை பந்தய மோட்டார் கார் ஓட்டுனர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் சங்கம் மற்றும் ஆசிய மோட்டார் பந்தயக் கழகம் ஆகியவற்றின் இணை முயற்சியான Hutch Sri Lanka Super Series 2018 பந்தயத்தில் 4 ஆவது பந்தயமாக கொமாண்டோ படைப்பிரிவுடன் இணைந்து இதனை ஏற்பாடு செய்வதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். வரலாற்றுரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் உலகத்தரம் வாய்ந்த பந்தயத்திடலில் தனித்துவமான ஒரு அனுபவத்தைக் கண்டு மகிழும் வாய்ப்பு இலங்கையிலுள்ள பந்தய ரசிகர்களுக்குக் கிட்டியுள்ளது. நாட்டிலுள்ள திறமைவாய்ந்த பந்தயப் போட்டியாளர்களுக்கு எதிராகப் போட்டியிட்டு, தமது திறமைகளைக் காண்பித்து, விலைமதிப்பற்ற அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பினை திறமைமிக்க எமது ஓட்டுனர்களும், ஓட்டிகளுக்கும் இப்பந்தய நிகழ்வு வழங்கவுள்ளது. அவர்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், மயிர்க்கூச்செறியும் பந்தய தினத்தை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம். இலங்கை பந்தய மோட்டார் கார் ஓட்டுனர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் சங்கம் தற்போது 35 ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதுடன், இந்நிகழ்வானது பந்தய நாட்காட்டியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக அமைந்துள்ளது. நாட்டில் மோட்டார் பந்தய வரலாற்றில் முதன்முறையாக இம்முறை SLGT மற்றும் MX Motorcycles ஆகிய இரு பந்தயப் பிரிவுகளின் வெற்றியாளர்களுக்கும் Maxxis tyres, Mobil மற்றும் Promowatch events ஆகியவற்றின் அனுசரணையில் புத்தம்புதிய கார் பரிசாக வழங்கப்படவுள்ளதுடன், Ford Laser மற்றும் Supermotard ஆகிய போட்டிப்பிரிவுகளின் வெற்றியாளர்களுக்கு Stafford Motor Co Pvt Ltd நிறுவனத்தின் அனுசரணையில் புத்தம் புதிய மோட்டார் சைக்கிள்கள் பரிசாக வழங்கப்படவுள்ளன.
0 Comments